March 29, 2018

தமிழகம் முழுவதும் 412 ஸ்மார்ட் வகுப்பறைகள் தயார் ஏப்ரல் 2ம் வாரம் முதல் நீட் தேர்வுக்கு மீண்டும் இலவச பயிற்சி


நீட் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் ஏப்ரல் 2ம் வாரத்தில் இருந்து மே முதல் வாரம் வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் முக்கிய பள்ளிகளில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்முதல் மருத்துவக்கல் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சித்தா உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப்படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை அரசு இலவசமாக நடத்தும் என அறிவித்தது. இதற்கான மையங்களில் நீட், ஐஐடி, ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 100 நீட்தேர்வு பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஜனவரி முதல் மொத்தம் 412 மையங்கள் அமைக்கப்பட்டன. இங்கு சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் பயிற்சி அளிக்கப் படுகிறது.

இதனிடையே அரசு பொதுத்தேர்வு வந்ததால் இப்பயிற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஏப்ரல் 6ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு முடிந்ததும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கி மே 5ம் தேதி வரை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக தேர்வு செய்யப்பட்ட மைய வகுப்பறைகளில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றப்பட்டு, ஆன்லைன் வகுப்புக்கு தேவையான கணினி, டிஷ், யுபிஎஸ் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணிகளும் இந்த மையங்களில் தற்போது நடைபெறுகின்றன. நீட் தேர்வு பயிற்சியை இந்த ஆண்டு மட்டுமின்றி தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு நடத்துவதற்கு 2 தனியார் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 28 வாரத்திற்கு 56 நாட்கள் இந்த வகுப்புகள் நடத்தப்படும். இதற்காக ஒவ்வொரு மையத்திற்கும் தலா ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்து 800 செலவிட நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரண பொருட்களுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் அதிக பட்சமாக 65 மாணவ, மாணவிகள் பயில்வர். இவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள புத்தகம் உள்ளிட்டவை வழங்கப்படும். பயிற்சி அளிப்பவர்களுக்கான உழைப்பூதியம் நாள் ஒன்றுக்கு ரூ.350 வீதம் ஒரு மையத்திற்கு 3 நபர் என நாள் ஒன்றுக்கு ரூ.1,050 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் நேரடியாக பயிற்சி அளிக்கும் அதே நேரத்தில் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களும் ஆன்லைனில் பயிற்சி கொடுப்பார்கள்.

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.