April 30, 2018

ஓட்டுநர் உரிமம் விண்ணப்பத்திலேயே உடல் உறுப்பு தானத்துக்கு விருப்பம் பெறலாம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு


ஓட்டுநர் உரிமம் பெறும்போதே, விருப்பமுள்ள மனுதாரர்களிடமிருந்து உடல் உறுப்புகளை தானம் செய்வது தொடர்பான உறுதிமொழியை பெறும் வசதியை உருவாக்குவதற்கு மத்திய அரசு கடந்த 2011-ம் ஆண்டு திட்டமிட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் இத்திட்டத்தை அமலாக்க முடியவில்லை.
இந்தச் சூழ்நிலையில், இத்திட்டத்தை அமல்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை அமலாக்க தற்போது மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதிலும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது. விண்ணப்பத்தில், ‘உடல் உறுப்புகளை தானம் செய்ய விருப்பமா, இல்லையா?’ என்ற கேள்வியும் சேர்க்கப்படவுள்ளது. இதற்கு, ‘ஆம்’ என்ற பதிலை குறிப்பிடுபவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் அளிக்கப்படும்போதே அதற்கான ஒரு குறியீடு மட்டும் சேர்த்து அச்சடித்து வழங்கப்படும். அந்தக் குறியீட்டின் மூலமாக, அந்த ஓட்டுநர் உரிமம் பெற்றவர், உடல் உறுப்பு தானம் அளிக்க முன்வந்தவர் என்பது தெரியவரும்.
இதுகுறித்து, ‘தி இந்து’விடம் தேசிய உடல் உறுப்பு தான அமைப்பின் இயக்குநர் விமல் பண்டாரி கூறும்போது, “மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. இதன்மூலம், உடல் உறுப்புதானம் பெறுபவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெறும் தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள். இந்தத் திட்டம் குறித்து மத்திய, மாநில அரசுகள் குறும்படம் உள்ளிட்டவை மூலமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்” எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிர் இழப்பவர் எண்ணிக்கை அதிகமாக இருந்தும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. அதேசமயத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் உடல் உறுப்பு தானம் அதிகமாக உள்ளது. உடல் உறுப்புகளை ஒருவர் தானம் செய்ய முன்வந்தால், அதன் மூலம் குறைந்தபட்சம் எட்டு உயிர்களை காக்க முடியும் எனக் கருதப்படுகிறது.
‘ஆர்கன் இந்தியா’ எனும் சர்வதேச பொதுநல அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி, உடல் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது. நமது நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை, ஒரு மில்லியனுக்கு வெறும் 2.26 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது.
இந்த அளவு, அமெரிக்காவில் 26 சதவீதமாகவும், ஸ்பெயினில் 35.3 சதவீதமாகவும் உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்வதில் முதலிடம் வகிக்கும் ஸ்பெயினுடன் இந்தியா சமீபத்தில் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவிலும் உடல் உறுப்பு தான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.