April 06, 2018

SMS உள்ளிட்ட சேவைகளுக்காக விதிகளை மீறி பணம் பிடித்தம் செய்யும் வங்கிகள்

* அப்பாவி வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்பு
* வங்கிகளுக்கு பல கோடி ரூபாய் கொள்ளை லாபம்

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி விதிகளுக்கு எதிராக, எஸ்எம்எஸ் உள்ளிட்ட சேவைகளுக்காக வங்கிகள் கட்டணம் வசூலிப்பதால் அப்பாவி வாடிக்கையாளர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் வங்கிகளுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் லாபம் கொட்டுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வங்கிகள் பல்வேறு சேவைகளை அளித்து வருகின்றன. வங்கிக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்தபடியே இணைய வங்கி சேவை உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம்.

அதேநேரத்தில், வங்கிக்கணக்கு விவரங்களை கண்டுபிடித்து நூதன முறையில் பணத்தை திருடும் ஹேக்கர்களும் அதிகரித்து வருகின்றனர்.இதுபோன்ற மோசடிகளை தடுக்கவும், வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை விவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் கட்டாயம் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இலவசமாக வழங்க வேண்டிய இந்த சேவைக்கு பல வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன என இந்திய வங்கி குறியீடு மற்றும் தர வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த வாரியத்தின் ஆய்வின்படி 48 வங்கிகளில் 19 வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து நிரந்தர கட்டணமாக ரூ15 வசூலிக்கின்றனர். ஆனால் வரியுடன் சேர்த்து வாடிக்கையாளர்கள் ரூ17.70 செலுத்த வேண்டியுள்ளது. ரிசர்வ் வங்கி விதிகளின்படி, டெபிட்கார்டு பரிவர்த்தனைகள், ஏடிஎம்களில் பணம் எடுத்தல், என்இஎப்டி அல்லது ஆர்டிஜிஎஸ் முறையில் பணம் அனுப்பும்போது சம்பந்தப்பட்டவர் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்ய கட்டாயம் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.  முறைகேடுகளை தடுக்க இவ்வாறு குறுந்தகவல் அனுப்புவதை கட்டாயம் ஆக்கிய ரிசர்வ் வங்கி, இவற்றுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தியுள–்ளது.

சில வாடிக்கையாளர்கள் மிக குறைவான தொகையை மட்டுமே இருப்பு வைத்துள்ளனர். இவர்கள்தான் வங்கிகளின் கட்டண முறையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்தின்படி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்  எஸ்எம்எஸ்க்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கும் வசதி உள்ளது.  ஆனால் வங்கிகள் நிரந்தர கட்டணமாக வசூலிக்கின்றனர். காலாண்டுக்கு ரூ15 மற்றும் வரி சேர்த்து வசூல் செய்யப்படுகிறது. ஒரு சில வங்கிகள் மாதாந்திர முறையில் கட்டணம் விதிக்கின்றனர்.

அவ்வாறு வசூலித்தாலும், வாடிக்கையாளர் பயன்படுத்துவதற்கு ஏற்ப வசூல் செய்தால் கட்டணம் குறையும். உதாரணமாக, ஒரு எஸ்எம்எஸ்சுக்கு அதிகபட்சமாக 8 முதல் 10 பைசாதான் ஆகும். ஒரு காலாண்டில் 100 எஸ்எம்எஸ்களை வாடிக்கையாளர்களுக்கு வங்கி அனுப்பியிருந்தால் கூட இதற்கு தொலைத்தொடர்பு நிறுவன கட்டணத்தின்படி 8 அல்லது 10 ரூபாய்தான் ஆகும்.

வங்கிகள் இவ்வாறு வசூலிப்பதால் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பணம் போய்விடாது. இருந்தாலும் வங்கிகளுக்கு மொத்த அளவில் பல கோடி ரூபாய் லாபம் இதன்மூலம் கிடைக்கிறது என  இந்திய வங்கி குறியீடு மற்றும் தர வாரியம் தெரிவித்துள்ளது.வங்கி அதிகாரிகள் சிலர் கூறுகையில், வாடிக்கையாளர் பயன்பாட்டுக்கு ஏற்ப எஸ்எம்எஸ் கட்டணம் வசூலித்தால் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் இது கணினி மூலம் தானாக அனுப்பப்படுகிறது.

அதோடு, யாருக்கு எவ்வளவு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கணக்கிடுவது கடினம் என்றனர். l 48 வங்கிகளில் 19 வங்கிகள் நிரந்தர கட்டணமாக காலாண்டுக்கு வசூல் செய்கின்றனர்.l வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ரூ15. ஆனால் வரியுடன் சேர்த்து வாடிக்கையாளர்கள் ரூ17.70 செலுத்த வேண்டியுள்ளது.l டெபிட்கார்டு பரிவர்த்தனை, ஏடிஎம்மில் பணம் எடுத்தல், என்இஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனையை உறுதி செய்ய அனுப்பும் எஸ்எம்எஸ்சுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என ரிசர்வ் வங்கி விதிமுறை தெரிவிக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ப கட்டணம் வசூலித்தால் கூட நிரந்தர கட்டணத்தில் பாதிதான் ஆகும்.l குறைந்தபட்ச இருப்பு மற்றும் அரிதாக பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் வங்கிகளின் கட்டண முறையால் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
நன்றி:- தினகரன்

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.