April 01, 2018

SC, ST பிரிவினர்க்கு இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை இல்லையா...

எஸ்சி, எஸ்டிக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் கிரீமிலேயர் முறை கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனினும், ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு (கிரீமிலேயர்) இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், ராஜஸ்தானை சேர்ந்த சம்தா அந்தோலன் சமிதி என்ற அமைப்பு சார்பில் வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன், ஷோபித் திவாரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், “எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த பணக்காரர்கள் இட ஒதுக்கீட்டின் பலனை தட்டிப் பறிக்கின்றனர். இப்பிரிவைச் சேர்ந்த ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் வறுமை, நக்சலிசம் மற்றும் சமூக சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, ஓபிசி பிரிவைப் போல எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா வாதிடும்போது, “எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு முறையில் கிரீமிலேயர் முறையை அமல்படுத்த முடியாது” என்றார்.
இதையடுத்து, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மண்டல் வழக்கு தொடர்பான தீர்ப்பில் கிரீமிலேயர் முறை ஓபிசி பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி:- தி இந்து

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.